ஏற்காட்டில் பூத்து குலுங்கும் மலர்கள்
ஏற்காட்டில் கோடை விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், பூக்கள் அழகாக பூத்துள்ளன.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் ஏற்காடு கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடை விழாவில் மலர் கண்காட்சி முக்கிய இடம் பிடிக்கும். இதற்காக ஏற்காட்டில் பல்வேறு மலர் செடிகள் பதிய வைக்கப்படும். பின்னர் கோடை விழா தொடக்க நாளன்று அந்த பூக்கள் அண்ணா பூங்காவை சுற்றிலும் வைத்து அழகுபடுத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஏற்காடு கோடை விழா வெகு விரைவில் தொடங்க உள்ளது.
இதற்காக ஏற்கனவே பதிய வைக்கப்பட்ட ரோஜா மலர், சாமந்தி, டேலியா, சால்வியா, பொக்குன்யா உள்ளிட்ட பல்வேறு வகையில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏற்காட்டில் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் நேற்று முதல் குளிர் காற்று வீச தொடங்கியது. இதே நிலை நேற்றும் நீடித்தது. இதனால் நேற்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். அவர்கள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டு உள்ள மலர்களை பார்த்து ரசித்தனர்.
அதே போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இந்த நிலையில் ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.