பாலசுப்பிரமணியம் சுவாமிக்கு, வைகாசி கார்த்திகை திருவிழா
மதுராந்தகம் அருகே பாலசுப்பிரமணியம் சுவாமிக்கு, வைகாசி கார்த்திகை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அச்சிறுபாக்கம் அடுத்த முருங்கை ஊராட்சியில் வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணியம் சுவாமிக்கு, வைகாசி கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. முருங்கை ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில், குளக்கரையில் அமைந்துள்ளது. கடந்த 26ல், மங்கல இசையுடன் கொடி ஏற்றுதல், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியுடன் கார்த்திகை விழா துவங்கியது.
பின், நேற்று முன்தினம் இரவு, விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கலசம் புறப்பாடு நடந்தது. நேற்று, விரதமிருந்து, காப்பு அணிந்த பக்தர்கள், சிவன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்த பெண்கள் கோவிலை வந்தடைந்தனர். பின், பால் காவடி, பறவை காவடி, பால் குடம் எடுத்தல் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்து வள்ளி, தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணிய சுவாமியுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தது. பெண்கள் ஆரத்தி எடுத்து, கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு, தெய்வீக பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.