தர்மபுரியில் வன உரிமை சட்டம் குறித்த கருத்து அரங்கம்
தமிழ்நாடு ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறை குறித்த கருத்தரங்கு பாரதிபுரத்தில் நடைபெற்றது.
தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சமூக செயல்பாடு இயக்கம் சார்பில் வனங்களைச் சார்ந்து வாழும் பட்டியலிடப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் அங்கு மூன்று தலைமுறையாக வாழும் இதர வனம் சார்ந்த வாழ்பவர்களுக்கான வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறை குறித்த கருத்தரங்கு இன்று தருமபுரி பாரதிபுரம் அருளருவி அருட்பணி பயிற்சி மையத்தில் தருமபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மனித உரிமை செயல்பாட்டாளர் செந்தில் ராஜா, மற்றும் தமிழக ஆதிவாசிகள் மாநிலத் தலைவர் வெங்கடேஸ்வரன், கலந்துகொண்டு ஆதிவாசிகளுக்கு தங்கள் வாழும் பகுதியில் வனம் சார்ந்த சட்டப்பிரிவினை எடுத்து வழங்கினர். அதில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை இந்தியா முழுவதும் 23,070,01 மக்களுக்கு 51 லட்சத்து 75 ஆயிரத்து 112.44 நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வளர்ந்த மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில் இதுவரை 12,728 நபர்களுக்கு மட்டுமே பண உரிமை வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும் .
சமூக வனவள உரிமை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 180 கிராமங்களுக்கு 1 கோடியே 38 லட்சத்து 38,711.50 ஏக்கர் வனநிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 671 கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இது சராசரியாக தேசிய அளவில் வெறும் 0.58 சதவீதம் மட்டுமே ஆகும் அதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. வனம் சார்ந்து வாழும் இதர இன மக்களுக்கு வன உரிமை சட்டம் 2006 ன் படி அங்கு பயிர் செய்வதற்கான அடையாளங்கள் மற்றும் ஊர் முதியோர்கள் வாக்குமூலமே போதுமானது. ஆனால் அரசு அலுவலர்கள் அவர்கள் காடுகளில் 75 ஆண்டுகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லிக்கொண்டு கிராம வன உரிமைக்குழு கிராம சபை தீர்மானங்களை தன்னிச்சையாக நிராகரிக்கின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் வனம் சார்ந்து வாழும் ஒருவருக்கு கூட வன உரிமை வழங்கப்படவில்லை அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதுவரை 2210 வனம் சார்ந்த வாழ்வோருக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 453 ஏக்கர் நிலம் வன உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழக அரசு வனத்துறை இடையூறுகளால் மிக மந்தமாக செயல்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் வேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக வனவுரிமை வழங்க வேண்டும். இல்லை எனில் சமூக நீதிப் பேசும் தமிழக அரசுக்கு தான் இந்த அலுவலர்களால் அவ பெயர் ஏற்படும் என கருத்துக்களை எடுத்து முன் வைத்தனர். இந்த விழிப்புணர்வு சங்க கூட்டத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.