வாணியம்பாடி நகராட்சி சார்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

வாணியம்பாடி நகராட்சி சார்பில் ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2024-03-11 09:58 GMT

திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி 8 வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலை பள்ளி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதனை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற வார்டு உறுப்பினர் சி.முஹம்மத் நோமான், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசனிடம் கோரிக்கை மனு வழங்கி இருந்தனர்.

இதன் பேரில் பள்ளி வளாகப் பகுதியில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 83 லட்சம் ரூபாயும், கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 22.50 லட்சம் ரூபாயும், பள்ளியில் குடிநீர் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய போர்வெல் அமைக்க 3 லட்சம் ரூபாயும் என‌ மொத்தமாக 1 கோடியே 8 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதே போல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொது மக்கள் வைத்த கோரிக்கையின் பேரில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (என்யுஎல்எம்) திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 40 லட்சம் ரூபாயும், வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நூலக நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான வி.எஸ் சாரதிகுமார், ஆகியோர் கலந்துகொண்டு ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், கட்டிட ஒப்பந்ததாரர் ஜெகன், 8 வது வார்டு மன்ற உறுப்பினர் சி.முஹம்மத் நோமான், திமுக கிளை செயலாளர் அதாவுல்லா, முன்னாள் கிளை செயலாளர் நசுருல்லா, ஏ.துஃபேல் அஹமத், இம்ரான்,அஸ்ஹர், சனாவுல்லா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜாகிர், சி.துஃபேல் அஹமத், மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News