கொல்லங்கோடு பகுதிகளில் போலி நகை அடகு வைத்து மோசடி 

கொல்லங்கோடு பகுதியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி  செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-07 06:03 GMT

போலி நகை அடகு வைத்து மோசடி 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் தனியார் பைனான்ஸ் ஒன்றில் நேற்று முன் தினம் ஒரு நபர் மூன்று வளையல்களை அடகு வைத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி சென்றார். அதேபோல் சிலுவைபுரம் பகுதியில் 3 வளையல்களை அடகு வைத்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கி சென்றுள்ளார். இரண்டு பைனான்ஸ்களிலும் அடகு வைத்த நகை போலி என்று தெரியவந்தது. அதன் உரிமையாளர்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பைனான்ஸ்களில் எச்சரிக்கையாக இருக்கவும், இது போன்று நகை அடகு வைக்க வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் மேட விளாகம் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸில் இரண்டு பேர் சென்று வளையல்களை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். தொடர்ந்து அதே இரண்டு நபர்களும் கண்ணனாகம் சந்திப்பில் உள்ள ஒரு பைனான்ஸிலும் வளையல்களை அடகு வைத்து பணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அது போலி நகை  என்று தெரிந்தவுடன் கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் செல்வதற்குள் நகை அடகு வைத்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர் இந்த கும்பல் கேரளா கும்பலாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது.
Tags:    

Similar News