இலவச வாகன பழுதுபார்க்கும் முகாம்
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு இலவச வாகன பழுதுபார்க்கும் முகாம் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மெக்கானிக் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
Update: 2024-05-04 05:34 GMT
சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் தேவராஜன், பொருளாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து மனுவை அளித்தனர். அதில், மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்காடு கோடை விழா- மலர் கண்காட்சியின்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு இலவசமாக வாகன பழுது நீக்கி கொடுத்து வருகிறோம். இதற்காக அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பந்தல் அமைத்து தருவது வழக்கம். அங்கு 30 மெக்கானிக்குகள் தங்கியிருந்து இருசக்கர வாகனத்தில் திடீர் பழுது ஏற்பட்டால் அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று பழுதை நீக்கி உதவி செய்து வருகிறோம். அந்த வகையில் இந்தாண்டும் ஏற்காடு கோடை விழாவுக்கு இலவசமாக வாகன பழுதுபார்க்கும் முகாம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல் கோடை விழா நடக்கும் நாட்களில் காலை, மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கோடை விழாவை தொடங்கி வைக்க வரும் மாவட்ட கலெக்டராகிய நீங்களே எங்களது இலவச பழுதுநீக்கம் சிறப்பு முகாமையும் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.