கோடை விடுமுறை பயனுள்ளதாக்க இலவச மூலிகை செடிகள் விநியோகம்!

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கவும் வீட்டுத்தோட்டம் அமைக்கவும் பள்ளி மாணவர்களுக்கு மூலிகை செடிகள் விநியோகம் செய்யப்பட்டது.

Update: 2024-04-25 09:01 GMT

மூலிகை செடிகள் விநியோகம்

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் தேசிய பசுமை படை மாணவர்களுக்கு நம் வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயம், நஞ்சில்லா மூலிகை தோட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொட்டபெட்டாவில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதன்படி பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வீட்டுத்தோட்டம் அமைக்க மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தக்சினணாமூர்த்தி வரவேற்றுப் பேசுகையில், "ஆரோக்கியமான வாழ்விற்கு மாணவர்கள் இயற்கையோடு இணைந்து செயல்படுவது அவசியம். பறவைகள், விலங்குகள் இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றன. மனிதன் மட்டும் இயற்கையை விட்டு நீண்ட தூரம் தள்ளி வந்து விட்டான். மேலும் எல்லா விதத்திலும் இயற்கைக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறான்," என்றார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில், "மாணவர்கள் நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய உங்கள் வீட்டில் இருப்பவர்களையும் வீட்டின் அருகில் இருப்பவர்களையும் வலியுறுத்த வேண்டும். பள்ளியில் மூலிகை தோட்டம் சிறப்புடன் செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும். மூலிகை தோட்டம் ஏற்படுத்தியதில் அனுபவம் பெற்று அந்த அனுபவத்தை பயன்படுத்தி, பல்வேறு பள்ளிகளிலும் மூலிகை தோட்டம் ஏற்படுத்த வேண்டும்," என்றார். மேலும் மாணவர்களுக்கு 30-க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் அவற்றின் மருத்துவ பயன்களை குறித்து விளக்கினார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர்கள் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் முன்னெடுக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் லிங்கேஸ்வரி நன்றி கூறினார். .....
Tags:    

Similar News