500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல் !
சங்ககிரி: பசுமை அமைப்பின் சார்பில் 500 மரக்கன்றுகள் ஊராட்சிக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் இயங்கி வரும் பசுமை சங்ககிரி அமைப்பின் சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வட்டூர் ஊராட்சியில் வளர்ப்பதற்கு 500 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர். சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி வட்டப்பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.
சங்ககிரி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளை பசுமையாக்க வேண்டுமென எண்ணிய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும், பசுமை சமூக ஆர்வலர்களும் இணைந்து பல்வேறு வகையான விதைகளை சேகரித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதிய வைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வட்டூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் உதவியோடு மரங்களை நட்டு வளர்ப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை சங்ககிரி அமைப்பினரை தொடர்பு கொண்டுள்ளனர். அதனையடுத்து பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி அமைப்பின் சார்பில் பதியம் போட்டு வைத்திருந்த இலுப்பை, நாவல், புங்கன், பூவரசு, பாதாம், சொர்க்கம், சீதா, கொடுக்காபுளி, வேம்பு, புளி உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார்.