25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: திருமலைகிரி ஊராட்சியில் சமுதாயகூடம்
திருமலைகிரி ஊராட்சியில் ரூ.35 லட்சத்தில் புதிய சமுதாயகூடத்தை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. திறந்து வைத்தார்
சேலம் ஊராட்சி ஒன்றியம் திருமலைகிரி ஊராட்சியில் புதிதாக சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருமலைகிரி ஊராட்சியில் புதிதாக சமுதாயகூடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு புதிய சமுதாய கூடத்தை ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் சமுதாய கூடத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா கட்டிடம் எனவும், அரங்கத்திற்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயரையும் சூட்டினார்.
முடிவில், 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புதிய சமுதாய கூடத்தை ஏற்படுத்தி கொடுத்த எம்.பி.க்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சேலம் கிழக்கு தி.மு.க. துணை மாவட்ட செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், திருமலைகிரி ஊராட்சி தலைவரும், சேலம் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மாணிக்கம், சேலம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கீதா குணசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.