முடித்த பணிகளுக்கு நிதி வரவில்லை - ஒப்பந்ததாரர்கள் புலம்பல்
பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, நிதி விடுவிப்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக, ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, கிராமப்புறங்களில் மத்திய - மாநில அரசு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராமப்புற பள்ளிகள் பராமரிப்பு, கழிப்பறை திட்டம், சுகாதார திட்டம் என. பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக, நிதி விடுவிப்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக, ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர்.நிதி விடுவிக்காத காரணத்தால், கடும் நிதிச்சுமை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர் கூறியதாவது: நாங்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் பணிகளுக்கு முறையாக நிதி விடுவிக்காமல் மிகுந்த தாமதம் செய்கின்றனர். புதிதாக கொண்டு வரப்படும் கணினி சாப்ட்வேர் காரணமாக, செய்த வேலைகளுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எம்.எம்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த பணிகள், பள்ளி பராமரிப்பு பணிகள், மாநில நிதிக்குழு பணிகள் என, பல்வேறு திட்டத்தின் கீழ் முடித்த பணிகளுக்கு நிதி விடுக்காமல் தாமதம் ஆவதால், நிதிச்சுமையால் சிரமப்பட்டு வருகிறோம்.