மார்த்தாண்டத்தில் ஷோரூமில் கார் திருடிய கும்பல்
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள கார் ஷோரூமில் திருட்டில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிர கோடு பகுதியை சேர்ந்தவர் சிவா ஸ்ரீனிவாசன் (48) இவர் அதே பகுதியில் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அந்தப் பகுதியில் ஷோரூம் அமைத்து அங்கு ஏராளமான கார்களை நிறுத்தி இருந்தார். சம்பவ தினம் இரவு ஷோரூமை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் வந்த போது, ஷோரூம் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு விலை உயர்ந்த கார்கள் திருட்டு போயிருந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் அவர் புகார் செய்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அருகில் உள்ள மற்றொரு கார் ஷோரூமிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து சம்பவத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை சேர்ந்த பிரபல கார் கொள்ளையன் மாயக்கண்ணன் தலைமையில் தான் இந்த கொள்ளை கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து தனிப்படை போலிசார் கேரளா மற்றும் மதுரைக்கு விரைந்துள்ளனர்.