பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே சுகாதாரச் சீர்கேடு
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே கொட்டிக் கிடக்கும் மருத்துவ கழிவால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
Update: 2024-05-15 09:40 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள, பழைய பேருந்து நிலையத்தில் கொட்டிக் கிடக்கும் குப்பைக் கழிவு துர்நாற்றத்தால் நோயாளிகள் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் செயல்படாத நிலையில், இடிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நகரப் பகுதியில் அள்ளப்படும் குப்பைக் கழிவுகளை இங்கு வந்து கொட்டப்படுவதால், மிக அருகிலேயே உள்ள அரசு மருத்துவமனை அண்ணா வார்டில் தங்கி இருக்கும் நோயாளிகள் குப்பைக் கழிவுகளின் துர்நாற்றத்தின் மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் குப்பைக் கழிவுகள், நெகிழி கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, நோயாளிகள், மருத்துவர்கள் மூச்சு விட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், நோயாளிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு உள்ள குப்பைகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்யவும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பழைய பேருந்து நிலையக் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த இடத்தில் சுகாதாரத்தை பேண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.