நுண்பார்வையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய தேர்தல் பொது பார்வையாளர்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 220 நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா ஆலோசனைகள் வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கியாளர்கள், காப்பீட்டு நிறுவனப் பணியாளர்களை நுண்பார்வையாளர்களாக நியமிக்க அறிவுறுத்தி உள்ளது அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஏதுவாக 220 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வாக்குச் சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து நேரடியாக பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களது வாக்குச் சாவடிகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் முறையான பதிவேடுகளை பராமரித்து அவற்றை வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் பொதுப்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று காலை 5.30 மணி அளவில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீர்நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது சரியான அடையாள அட்டை உள்ளதா எனவும், வாக்காளர்கள்,வாக்களிக்கும் பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 12 அடையாள அட்டைகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறதா எனவும் உறுதி செய்திட வேண்டும். எனவே நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தல் நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா. இ.ஆ.ப. தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வெங்கடேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.