ஞானக்கொல்லி தோப்பு ஓடைபாலம் இணைப்பு சாலை பணி தீவிரம்.
ஆர்கே பேட்டை அருகே ஞானக்கொல்லி தோப்பு ஓடைபாலம் இணைப்பு சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆர்.கே. பேட்டை ஒன்றியம் கொண்டாபுரம் அருகே பாய்கிறது ஞானக்கொல்லி தோப்பு ஓடை. பொன்னை அணைக்கட்டில் இருந்து கிழக்கு பேபி கால்வாய் வழியாக வெளியேறும் உபரி நீர், சோளிங்கர் ஏரி அய்யனேரி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளைக் கடந்து ஞானக்கொல்லி தோப்பு அருகே ஓடையாக உருவெடுக்கிறது. கொண்டாபுரத்தில் இருந்து இந்த ஓடையை கடந்து அய்யனேரி, பாராஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஓடையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது, தரைப்பாளத்திற்கு மேலே வெள்ளம் பாய்ந்ததால், இந்த மார்க்கத்தில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. பாலம் கட்டும் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.