துபாயிலிருந்து தங்கம் கடத்தல் - வாலிபரை கைது செய்த சுங்கத்துறை
மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து ரூ.56 லட்சம் மதிப்புள்ள 790-கிராம் தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் இருந்து நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த 180 ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிடம் மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது ஸ்கேனர் கருவியில் அலாரம் அடிக்க துவங்கியது.
மேலும்., பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவரது உடைமையில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி ன்பவரின் மகன் முகமது தஸ்தாகீர் (21) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த பேஸ்ட் வடிவில் இருந்த தங்கத்தை சோதனை செய்தததில் அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 55,97,150 ரூபாய் மதிப்புள்ள 790 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து., தங்கத்தை கடத்தி வந்த முகமது தஸ்தாகீரிடம் விசாரணை மேற்கொண்டபோது இந்தியாவிற்கு கடத்திச் சென்று உரிய நபரிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறி அனுப்பி வைத்ததாகவும்., பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தி வந்ததாகவும் வாலிபர் ஒப்புக்கொண்டு உள்ளார். ஏற்கனவே, கடந்த மூன்றாம் தேதி மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து பணத்தைக்காக கடத்தி வந்த ஒருவர் பிடிபட்ட நிலையில் மீண்டும் மற்றொரு வாலிபர் பணத்திற்காக தங்கத்தை கடத்தி வந்தது மதுரை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு பின்புலமாக செயல்படும் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தொடர் விசாரணையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.