சேலம், ஆத்தூர், நாமக்கல்லில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு அரசு பஸ்கள்

சேலம், ஆத்தூர், நாமக்கல்லில் இருந்து இன்று முதல் சென்னை கிளாம்பாக்கத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-30 01:22 GMT

அரசு பேருந்துகள் 

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, ராசிபுரம் மற்றும் நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படும் அனைத்து சென்னை வழித்தட பஸ்களும் கோயம்பேடு புறநகர பஸ் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, ராசிபுரம் மற்றும் நாமக்கல் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து சென்னை வழித்தட பஸ்களும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்திற்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக சேலம் பஸ் நிலையத்தில் இருந்து நேரடியாக சென்னை மாதவரம் பஸ் நிலையத்திற்கு ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், அம்பத்தூர் மற்றும் கொளத்தூர் மார்க்கமாக 16 முறை பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்திலும் 16 முறை இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News