சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா !

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 3,665 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் வழங்கினார்.

Update: 2024-07-08 09:44 GMT

பட்டமளிப்பு விழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி அன்னபூர்ணா கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழக இணை வேந்தர் டத்தோ எஸ்.சரவணன், துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், சந்திரசேகர், அனுராதா கணேசன், இயக்குனர்கள் காமாட்சி, அருணாதேவி, ஜெகநாதன், சுமதி மற்றும் நிர்வாக இயக்குனர்கள் (வளாக வளர்ச்சி) வசுந்தரா, கோகுல் கிருஷ்ணன், சண்முகசுந்தரம், ஆவர்த்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி தலைவர் விஸ்வ மோகன் கடோச் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்றவர்களை வாழ்த்தி பேசுகையில், கல்வியின் நோக்கம் என்ன, அதில் உள்ள பிரச்சினைகளை எவ்வளவு சிறப்பாக தீர்க்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்பது முக்கியம்.

எதை செய்தாலும் அதன் முடிவுகள் மற்றும் செயல்கள் விரும்பிய முன்னேற்றத்திற்கான தொழில், வேலை மற்றும் வாழ்க்கையை சார்ந்து இருக்க வேண்டும், என்றார். தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக ஆர்வலர் பாலம் கல்யாண சுந்தரம், கேரளாவை சேர்ந்த இலக்கிய அறிஞர் கவுரி லட்சுமிபாய் ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டங்களை பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் வழங்கினார்.

இதையடுத்து மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி, பார்மசி, செவிலியர், பிசியோதெரபி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மேலாண்மை, அலைடு ஹெல்த் சயின்ஸ், கலை அறிவியல், உடற்கல்வியியல், கட்டிடக்கலை மற்றும் சட்டம் ஆகிய கல்லூரிகளில் படித்த 3,665 மாணவ, மாணவிகளுக்கு முனைவர், முதுநிலை, இளநிலை ஆகிய பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதாவது, 75 பேர் முனைவர் பட்டமும், 113 பேர் தங்க பதக்கமும், 96 பேர் வெள்ளி பதக்கமும், 77 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

Tags:    

Similar News