பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது ...... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 09 மனுக்கள் அளித்தனர்.
பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த குறைதீர் கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி பயிலும் வகையில் 3 நபர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் கல்வி உதவித்தொகையும், இயற்கை மரணமடைந்த முன்னாள் படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.10,000 ஈமச்சடங்கு நிதியுதவியும் என 4 நபர்களுக்கு ரூ.85,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்குவதற்கு என்னென்ன திட்டங்கள் உள்ளது, வங்கிகளில் அவர்களுக்கென என்னென்ன சிறப்பு திட்டங்கள் உள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத் குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கலையரசி காந்திமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.