நோயாளிகளின் உறவினர்களால் தொல்லை - மருத்துவர்கள் கருத்து

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ராஜகுமார் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், நோயாளிகளை அவசர சிகிச்சைக்கு அழைத்துவரும்போது நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவிடாமல் உடன் அதிக அளவில் உறவினர்கள் வந்து பிரச்சனை செய்வதால் அவர்களை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருப்பதாக மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.

Update: 2024-02-08 04:53 GMT

கலந்தாய்வு கூட்டம் 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், லேப்டெக்னிஷியன்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், டாக்டர்கள். செவிலியர், டெக்னிசீயன், உதவியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

இதில் நோயாளிகளை அவசர சிகிச்சைக்கு அழைத்துவரும்போது நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவிடாமல் உடன் அதிக அளவில் உறவினர்கள் வந்து பிரச்சனை செய்வதால் அவர்களை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருப்பதால் அடுத்து வரும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாமல் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் பெரும்பான்மையான டாக்டர்கள் கருத்து தெரிவித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.ராஜகுமார் கூறுகையில் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் தேவைப்படுகின்றனர் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்து தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்களை பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றை கையாள்வதற்கு விரைவில் மருத்துவ நிபுணர்கள்  நியமிக்கப்படுவார்கள். நோயாளிகளுடன் அதிக அளவில் உறவினர்கள் வருவதால் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், நோயாளிகளுடன்; உதவியாளர் ஒருவரை மட்டும் அனுமதிக்கும் வகையில்; அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நோயில்லாத மாவட்டமாக மயிலாடுதுறையை மாற்றுவதற்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News