இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-24 12:11 GMT

இல்லம் தேடி கல்வி

தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2700 மையங்கள் செயல்பட்டன. இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. கரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும், கடந்த மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் நடக்கவில்லை.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரத்தில பின்தங்கிய தன்னார்வலர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News