திருப்புவனம் பகுதியில் வைக்கோல் விலை உயர்வு
திருப்புவனம் பகுதியில் வைக்கோல் விலை உயர்வு - கால்நடை வளர்ப்போர் கவலை.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 05:12 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வைக்கோல் கட்டு விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு மூவாயிரம் எக்டேரில் கோ 51, என்.எல்.ஆர்., ஆர்.என்., ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன.கடந்த ஜனவரி முதல் அறுவடை நடந்து வருகிறது. ஒரு ஏக்கரில் அறுவடை முடிந்த பின் 35 முதல் 50 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும், நெல் ரகங்களை பொறுத்து இது கூடும். கடந்த மாதம் வரை ஒரு கட்டு 60 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 100 ரூபாய் என உயர்ந்துள்ளது. பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வைக்கோல் கொள்முதல் செய்ய வந்ததால் விலை உயர்ந்துள்ளது. கேரளா பகுதிகளில் நெல் விவசாயம் இல்லாததால் கால்நடைகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் வைக்கோல் கொண்டு செல்கின்றனர். ஒரு லாரியில் 165 கட்டுகள் வரை ஏற்றலாம் என்பதால் வியாபாரிகள் வைக்கோல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வைக்கோல் வாங்கி கேரளா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.