காஞ்சியில் சுகாதார நிலையங்கள் நிலை படுமோசம் !
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 துணை சுகாதார நிலையங்களின் கட்டடம் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கலாக உள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 11:58 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 துணை சுகாதார நிலையங்களின் கட்டடம் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால், கிராமங்களில் மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில், ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 18 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், ஐந்து நகர ஆரம்ப சுகாதார நிலையம், 143 கிராமப்புற துணை சுகாதார நிலையம், 26 நகர துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. தவிர, ஐந்து நடமாடும் மருத்துவ வாகனம், 10 பள்ளி சிறார் நல வாகனம் என, பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவம் தொடர்பாக ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அந்த வரிசையில், துணை சுகாதார நிலையங்களுக்கு, கட்டட வசதிகள் அறவே இல்லை. ஏற்கனவே இருந்த கட்டடங்களும், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்களை கட்டிக் கொடுத்தாலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இன்றி, செவிலியர் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கீழ்கதிர்பூர், ஈஞ்சம்பாக்கம், தண்டலம், படப்பை, அகரம் துளி உட்பட 42 துணை சுகாதார நிலையங்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், போலியோ சொட்டு மருந்து, யானைக்கால் தடுப்பு மாத்திரை, வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கர்ப்பிணியரின் சுகாதார மேம்பாடு பணிகள் தொய்வடைந்து உள்ளன.