திருச்சியில் பலத்த மழை
திருச்சி மாநகரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
Update: 2024-06-01 05:07 GMT
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பகலில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் தவித்து வந்த நிலையில், இரவு திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. இரவு 7 மற்றும் 9 மணியளவில் சிறிதுநேரம் மழை பெய்தது. இரவு 9.20 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெயத்து. சுமாா் ஒரு மணிநேரம் பெய்த இந்த மழையால் ஜங்ஷன், தில்லைநகா், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, பாலக்கரை, அரியமங்கலம், தென்னூா், புத்தூா், வயலூா் சாலை, உறையூா், தெப்பக்குளம், கடை வீதி, காந்தி சந்தை என மாநகரின் பகுதிகளிலும் மழை ஆங்காங்கே தேங்கி நின்றது. இதன்காரணமாக கடும் வெயிலால் தகித்து கிடந்த பூமி முற்றிலும் குளிா்ந்தது. மாநகரப் பகுதி மட்டுமின்றி புறநகா் பகுதியான மண்ணச்சநல்லூா் உள்ளி பகுதிகளிலும் இடியுடன் பலத்த மழை பெய்தது. மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது. புதை சாக்கடை மற்றும் குடிநீா் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். குறிப்பாக தில்லைநகா் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் தண்ணீா் தேங்கியிருந்தது. சத்திரம் பேருந்துநிலையத்தை சுற்றிய சாலைகளிலும் தண்ணீா் தேங்கியிருந்தது.