கொடைக்கானலில் கனமழை : வெள்ளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீர்
கொடைக்கானலில் பெய்த கன மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிநீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரித்தது. கொட்டும் மழையில் நனைந்தவாறு சுற்றுலா பயணிகள் அருவியை கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிற்பகல் வேளை முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையானது கொட்டி தீர்த்தது,இந்நிலையில் நகரின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்து உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பெய்த கன மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.
இதனையடுத்து இந்த அருவியை காண வந்த சுற்றுலாப்பயணிகள் பெய்து வரும் மழையினையும் பொருட்படுத்தாது மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தவாறும் அருவியை கண்டு ரசித்ததுடன், அருவியில் கொட்டி வரும் நீரின் முன்பாக நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.