காசவளநாடு கொல்லாங்கரை ஊராட்சியில் சரித்திர நாடகம்
காசவளநாடு கொல்லாங்கரை ஊராட்சியில் சரித்திர நாடகம் நடைபெற்றது.
வைகுந்த ஏகாதசியையொட்டி, தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் சரித்திர நாடகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. காசவளநாடு கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசியையொட்டி, சரித்திர நாடகம் நடத்தப்படுவது வழக்கம்.
ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் கிராம மக்கள் கண்விழித்து, மறுநாள் அதிகாலை பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இரவில் தூங்காமல் கண் விழிப்பதற்காக வைகுந்த ஏகாதசி நாளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தப்படுகிறது.
இதன்படி, இக்கிராமத்தில் நிகழாண்டு வைகுந்த ஏகாதசியையொட்டி, நாடக விழா டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாள் இரவு ஸ்ரீசத்தியவான் சாவித்திரி நாடகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வைகுந்த ஏகாதசி நாளான சனிக்கிழமை இரவு ஸ்ரீருக்மாங்கதன் சரித்திர நாடகம் நடைபெற்றது.
இதே போல, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீமத் சம்பூர்ண ராமாயணம் நாடகம் நடைபெற்றது. இதில், இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடித்தனர். நாடகத்தில் பெண்கள் நடிப்பதில்லை என்பதால், அப் பாத்திரங்களையும் ஆண்களே நடித்தனர்.