ஹோலி பண்டிகை : சொந்த ஊருக்கு புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்

ஹோலி பண்டிகை கொண்டாட திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களுக்கு சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

Update: 2024-03-22 10:44 GMT

ஹோலி பண்டிகை கொண்டாட திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். கூட்ட நெரிசலில் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டும் ஜன்னல் வழியாகவும் ஏறி சென்றனர். பின்னலாடை நகரான திருப்பூரில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். தீபாவளி, தசரா, ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக வைத்து வந்தனர்.

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் திருப்பூரில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு செல்ல துவங்கினர். ஆலப்புழாவில் இருந்து தன்பாத் வரை செல்லக்கூடிய ரயிலில் வட மாநில தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டும், ஜன்னல் வழியாகவும் உள்ளே ஏறி சென்றனர்.

இதேபோன்று கோர்பா, திப்ருகர் போன்ற ரயில்களிலும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஹோலி பண்டிகை கொண்டாட வருவதற்காக சென்று வருகின்றனர். தற்பொழுது திருப்பூரில் ஆர்டர்கள் குறைவால் வட மாநில தொழிலாளர்கள் செல்வது பெருமளவு பாதிப்பு இல்லை என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News