கரூரில் ஆதரவு கோரிய இந்திய ஜனநாயக கட்சியினர்

கரூரில், கூட்டணி கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து இந்திய ஜனநாயக கட்சியினர் ஆதரவு கோரினர்.

Update: 2024-03-21 00:50 GMT

கரூரில், கூட்டணி கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவை கோரிய இந்திய ஜனநாயக கட்சியினர். இந்தியா முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது அணியைச் சார்ந்த கூட்டணி கட்சிகளை அமைத்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்கள் அறிவிப்புப்படலம் நடைபெற்று வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி,புதிய நீதி கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது.

இதில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சி கரூர் மேற்கு மாவட்ட தலைவர் சுந்தர் ஜி என்கிற மாணிக்கம் தலைமையில், கட்சி நிர்வாகிகள் இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பின்னர் தேர்தல் பணி மேற்கொள்வது தொடர்பாக முதல் கட்ட ஆலோசனையும் மேற்கொண்டனர். இதே போல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்ராயனை கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தர்மதுரை, மாநில துணை செயலாளர் நெல்லை ஜீவா, கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, கிழக்கு மாவட்ட செயலாளர் பிச்சை, குளித்தலை நகர தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News