சட்டவிரோத சரவெடி தயாரிப்பு - பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
சிவகாசி அருகே விதிமுறைகளுக்கு புறம்பாக, சட்டவிரோதமாக சரவெடிகளை தயாரித்த பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இதில் சில பட்டாசு ஆலைகளில் விதி மீறல் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் இறப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே ராமதேவன் பட்டியில் கிராமத்தில் இயங்கி வந்த ஒரு பட்டாசு ஆலையில் வெடி ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்டநிர்வாகத்தில் உத்தரவின் பேரில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஆய்வு தாசில்தார் திருப்பதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாவட்ட முழுவதிலும் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிவகாசி அருகே அனுப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு பட்டாசு ஆலையில் விஏஓ காளியப்பன் தலைமையில் வருவாய் துறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறி மரத்தடியில் அமர்ந்து பட்டாசு தயாரித்ததும் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரித்ததும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் மீனம்பட்டியைச் சேர்ந்த ஞானம் (54) என்பவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்