சேதமடைந்த வீடுகளில் குடியிருக்கும் இருளர் இன மக்கள்

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டில் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-07 08:43 GMT

 காரைத்திட்டு இருளர் குடியிருப்பு

செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி காரைத்திட்டில், இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதுப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற இடங்களில், கூலி வேலை செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், அவர்கள் குடிசையில் வசித்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதி, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு, காரைத்திட்டில் இரண்டு ஏக்கர் நிலத்தை, அதன் பெயரில் கிரயத்திற்கு வாங்கியது. இருளர் குடும்பங்களுக்கு, 2005ல், 36 வீடுகள் கட்டி ஒப்படைத்தது.

அவர்களும், 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சொற்ப வருமானமே உள்ள அவர்களால், வீட்டை பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ இயலவில்லை. வீடு கட்டப்பட்ட சில ஆண்டுகளில், சுவர், கூரை விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பெயர்ந்து, கட்டடம் பலமிழந்தது. வாயிற்கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து சீரழிந்துள்ளன. மழைநீர் வீடுகளுக்குள் பெருக்கெடுக்கிறது. இப்பகுதி தாழ்வாக உள்ளதால், மழை வெள்ளம் சூழ்கிறது. இடியும் அபாயத்தில் உள்ள வீடுகளில், அபாயத்துடன் வசிக்கின்ற அவர்கள், வீடுகளை புனரமைக்க அல்லது புதிய வீடுகள் கட்ட, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, அமைப்பின் பெயரில் உள்ள பட்டா அடிப்படையில், ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை, வீடற்ற 17 குடும்பங்களுக்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக வீடுகள் கட்டியுள்ளது.

Tags:    

Similar News