2025-ஆண்டு பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும்
2025-ஆண்டு பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4-ஆவது வழித்தடத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி இடையேயான முதல்கட்ட சேவையை 2025-ஆம் ஆண்டில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை நிறுத்திவைக்க பூந்தமல்லியில் பணிமனை கட்டப்பட்டு வருகிறது. தானியங்கி ரயில்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது. 3 பெட்டிகளை கொண்ட அந்த ரயிலில் 1,000 பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும். முதல்கட்டத்தில் ரயில் இயக்குவது, நிறுத்துவது, ரயில் கதவை திறப்பது, மூடுவது எல்லாம் ஓட்டுநரால் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏதாவது அவசர காலத்தில் உதவி தேவை என்றால், இயக்க கட்டுப்பாட்டு மைய ஊழியர் ரயில் செயல்பாட்டை கட்டுப்படுத்துவார். அடுத்த நிலையத்தை அடைந்த பிறகு, கட்டுப்பாட்டாளர் வசம் ஒப்படைக்கப்படும்.
2025-ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி பணிகள் நிறைவடையும்போது சுமார் 138 ரயில்கள் ஓடும் என்றும், அப்போது 19.2 லட்சம் மக்கள் தினசரி பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.