9 மாதங்களுக்குப்பிறகு மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் திறப்பு

மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் 9 மாதங்களுக்குப்பிறகு நாளை மறுநாள் திறக்கப்படும் நிலையில், பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-20 13:50 GMT

மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் 9 மாதங்களுக்குப்பிறகு நாளை மறுநாள் திறக்கப்படும் நிலையில், பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடந்த தீமிதி திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே வழிபாடு செய்வதில் பிரச் சினை ஏற்பட்டது. கோவிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் எல்லோருக் கும் வழிபாடு நடத்த அனுமதி உண்டு என்று ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் மற்றொரு தரப்பினர், இக்கோவில் தங்களுக்கு சொந்தமானது, இது தங்களுடைய மூதாதையர் காலத்தில் இருந்து வழி பட்டு வருகிற குலதெய்வ கோவில், இதில் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றனர்.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாத்தி டும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதியன்று காலை அந்த கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதோடு கோவிலுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்து நோட்டீசும் ஒட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கோவிலை திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலை உடனே திறந்து, பொதுமக்கள் இன்றி தினசரி பூஜை நடத்தவும், இந்து சமய அறநிலையத்துறை மூலம் குறிப்பிட்ட இரு சமூகத்தையும் சாராத பொது நபரை பூசாரியாக நியமித்து வழிபாட்டுக்கான பூஜைசெய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் 9 மாதங்களுக்குப்பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலை திறந்து பூஜை செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, நாளை மறுநாள் காலை கோவிலை திறந்து, இந்து சமய அறநிலையத்துறை நியமிக்கும் பூசாரி மூலம் தினசரி பூஜை மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கோவில் பகுதியில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்னும் தொடர்வதால் பொதுமக்கள் யாரும் வழிபட அனுமதியில்லை. கோவில் பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றனர்.

Tags:    

Similar News