கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு
கொடைக்கானலில் நிலவிய பருவநிலை மாற்றத்தினால் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் கடந்த வருடத்தை விட சற்று அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குளுமை நிறைந்த பகுதியாகும்,இங்கு கால நிலைக்கு ஏற்றவாறு பழ வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன,இதில் குறிப்பாக அதிக சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது,குறிப்பாக பள்ளங்கி அட்டுவம்பட்டி, வில்பட்டி, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, அடுக்கம் போன்ற மலைக்கிராமங்களில் அதிக அளவில் பிளம்ஸ் பழங்கள் விளைகின்றன.
இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் அதிக சுவையோடு இருப்பதால் சுற்றுலாப்பயணிகளையும்,பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது, மேலும் இங்கு விளைவிக்கப்படும் பிளம்ஸ்கள் கொடைக்கானல் நகரில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, கொடைக்கானல் ரோடு,திருச்சி,திண்டுக்கல் உள்ளிட்ட பெருமாநகரங்களுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் பிளம்ஸ் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் துவங்கி, அறுவடை பணியில் மலைக்கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளில் நிலவிய கடும் வெப்பம்,அதிகமாக பெய்த மழையால் பிளம்ஸ் பழங்களில் வெடிப்பு ஏற்பட்டும் விளைச்சல் குறைவாக இருப்பதாகவும்,கடந்த வருடத்தை விட இந்த வருடம் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அதிகரித்து இருப்பதாக மலைக்கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்,மேலும் பிளம்ஸ் பழங்கள் கடந்த வருடத்தில் ஒரு கிலோ பிளம்ஸ் பழங்கள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இந்த வருடம் ஒரு கிலோ பிளம்ஸ் பழங்கள் 80 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை விற்பனையாவதாக மலைக்கிராம விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து பிளம்ஸ் சீசன் காலங்களில் மட்டும் நாள் ஒன்றிற்கு 10 முதல் 15 டன் வரை தமிழகத்தில் உள் மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் உள்ளூர் மலைக்கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதாகவும் இது போன்ற பருவ நிலை மாற்றம் காலங்களில் பிளம்ஸ் பழங்களை இருப்பு வைக்கும் வகையில் குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனவும் பிளம்ஸ் விளைச்சல் பாதிப்படையும் சமயங்களில் தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவும் , அதே போல உரிய மருந்துகளை வழங்க முன்வர மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.