டெல்டா மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பூமியைக் காப்போம். அதே நேரத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான பணிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது: இந்தக் கூட்டணி தொடர்ந்து எட்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒன்பதாவது வெற்றியையும், பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பத்தாவது வெற்றியையும் இக்கூட்டணி பெறும்.
தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு சிப்காட் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதேபோல, விவசாயம் சாந்த தொழிற்பேட்டைகளையும் இப்பகுதிக்குக் கொண்டு வருவோம். திருவாரூரிலும் தொழிற்பேட்டைக்கான இடம் தேர்வு நடைபெறுகிறது. எனவே, விரைவில் திருவாரூருக்கு நல்ல செய்தி இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பூமியைக் காப்போம். அதே நேரத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான பணிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார்" என்றார் டி.ஆர்.பி.ராஜா.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: இக்கட்சிக்கு ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எட்டாவது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அவர் கொண்டு வந்த திட்டம் இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலர் 23 நாள்களில் 8 ஆயிரத்து 500 கி.மீ. பயணித்து பிரசாரம் செய்தார். இதன் மூலம் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளோம். அடுத்து 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான பணியைத் தொடங்குவதற்கான கூட்டமாகவும் இக்கூட்டம் இருக்கும்" என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இக்கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பி.ஜி.ராஜேந்திரன், டி.ஆர்.லோகநாதன், எஸ்.எம்.பி.துரைவேலன், திராவிடர் கழகப் பொதுச் செயலர் இரா.ஜெயக்குமார், மதிமுக தெற்கு மாவட்டச் செயலர் வி. தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முத்து.உத்திராபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலர் கோ.ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.