அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை,அறிவியல் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, செஞ்சி அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

Update: 2024-05-30 06:46 GMT

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்த கல்வியாண்டிற்கான (2024-25) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட 13 இளங்கலை படிப்புகளுக்கு 2 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் அதில் சேர 19,167 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்கியது.

முதல்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளான விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை ஆகிய முன்னுரிமை பிரிவு மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்றது.தற்போது அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமாக இருப்பதால் அங்கு நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்தது. சரியாக காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகளை சேர்க்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த கலந்தாய்வில் பங்கேற்ற சிறப்பு பிரிவு மாணவ - மாணவிகளிடம், சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு சேர்க்கை நடந்தது.

அதாவது விளையாட்டு பிரி வில் 59 மாணவ- மாணவிகளும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் 6 பேரும், மாற்றுத் திறனாளிகள் 3 பேரும், தேசிய மாணவர் படையை சேர்ந்த ஒருவரும் சேர்க்கை செய்யப் பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப் பட்டது. இதையடுத்து வரும் ஜூன் மாதம் 10-ந் தேதி பொதுப்பிரிவு மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதேபோல் விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. இக்கல் லூரியில் உள்ள 11 பாடப்பிரிவுகளுக்கு 18,640 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளான விளையாட்டு, முன்னாள் ராணுவம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் நடந்த இக்கலந்தாய்வில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் 35 இடங்கள் இருந்த நிலையில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவை பூர்த்தி செய்யப்பட்டன. இதேபோல் செஞ்சி அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் லலிதா முன்னிலையில் நேற்று கலந்தாய்வு நடந்தது.

Tags:    

Similar News