நகை கொள்ளை வழக்கில் கேமராவில் பதிவானவர் பற்றி விசாரணை !

விஷ்ணு காஞ்சி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரே நபர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Update: 2024-03-12 08:55 GMT

சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாவீர், 62. தங்க நகைக்கடை உரிமையாளர். இவர், வீட்டின் தரை தளத்தில் நகைக்கடையும், முதல் தளத்தில் உள்ள வீட்டிலும் தங்கியிருக்கிறார். இவர், வீட்டை பூட்டிக் கொண்டு, கடந்த 1ம் தேதி வெளியூர் சென்று, கடந்த 3ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பால்கனியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் உள்ள பீரோவில் இருந்து, 150 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விஷ்ணு காஞ்சி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரே நபர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த நபர் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார், இரு தனிப்படை அமைத்தனர். ஒரு தனிப்படையினர், ஆந்திர மாநிலத்திற்கும், மற்றொரு தனிப்படையினர் கர்நாடக மாநிலத்திற்கும் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பை ஒன்றை மாட்டிக் கொண்டு, 'ஷூ' அணிந்தபடி, 30 - 35 வயதுக்குட்பட்ட நபராக உள்ள அந்த நபர் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News