நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

சேதுபாவாசத்திரம் அருகே நடந்த நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகள் பயிற்சியில் பல்வேறு வேளாண்மை நுட்பங்கள் அதிகாரிகள் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.

Update: 2024-01-12 04:19 GMT

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரம், முதுகாடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ்.,  வரவேற்றார்.

சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி தலைமை வகித்துப் பேசுகையில், "மணல்பாங்கான வண்டல் மண், செம்மண், நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. சட்டிக்கலப்பையை பயன்படுத்தி உழுத பின் 3 - 4 முறை இரும்பு கலப்பை அல்லது நாட்டுக்கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழ வேண்டும். உழவர்களில் பெரும்பாலானோர் முந்தைய அறுவடையின் போது சேமித்து வைத்திருக்கும் விதைகளையோ, தனியார் விற்பனை நிலையங்களிலிருந்து              டி.எம்.வி-7, டி.எம்.வி-13, வி.ஆர்.ஐ-6, கதிரி லெபாக்ஸி-1812, போன்ற நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். பெருவாரியான விவசாயிகள் சால் விடுதல் எனப்படும் கலப்பைக்குப் பின் விதைக்கும் முறையையும் மற்றும் விதை விதைக்கும் கருவிகள் மூலமாகவும் விவசாயிகள் விதைத்து வருகின்றனர். மண்ணின் வகையைப் பொருத்து 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை பாத்தி அமைக்கலாம். ஏக்கருக்கு 50 கிலோ விதையைப் பயன்படுத்த வேண்டும்.

பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு 15 விழுக்காடு கூடுதலாகப் பயன்படுத்தலாம். வரிசைக்கு வரிசை 30 செ.மீட்டரும், செடிக்கு செடி 10 செ.மீட்டரும், 4 செ.மீட்டர் ஆழத்திலும் விதைக்கவும், ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்" என்றார். பட்டுக்கோட்டை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் ஆர்.ஆனந்தன்., பேசுகையில்,"ரைசோபியம் (600 கிராம்), அசோஸ்பைரில்லம் (600 கிராம்), பாஸ்போபாக்டீரியா (600 கிராம்) இவைகளை ஒரு எக்டருக்கு தேவையான விதைகளுடன், ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது தென்னை நார்க்கழிவை இட வேண்டும். வேளாண்மை துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்ட சத்துக்கலவை எக்டருக்கு 12.50 கிலோவுடன், உலர்ந்த மணலை பயன்படுத்தி 50 கிலோவாக    விதை விதைத்தவுடன் மண்பரப்பில் தூவ வேண்டும்.

இதை இடும் போடு மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 400 கிலோ ஜிப்சத்தை 45-ஆம் நாள் இட்டு மண் அணைக்க வேண்டும். சிவப்பு கம்பளிப்புழுக்களை விளக்குப்பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். புழுக்களை கட்டுப்படுத்த எக்டருக்கு டைகுளோர்வாஸ் 750 மில்லி மருந்தை ஒட்டு திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்" என்றார்.  சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் பேசுகையில், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் ஆ.தமிழழகன், சி.ஜெயக்குமார், தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆ.நிவாசன் மற்றும் பயிர்அறுவடை பரிசோதனையாளர் செ.வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News