கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவு
தமிழ்நாடு அரசின் சுகாதார சிறப்பு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவும், ரூ.21 கோடி மதிப்பில் அதி தீவிர சிகிச்சை பிரிவும் துவங்கப்பட்ட உள்ளது.
Update: 2024-01-08 01:47 GMT
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்து 500 நோயாளிகள் வந்து செல்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி 900 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 35 மேற்பட்ட சிறப்பு அறுவை சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 4கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கேன்சர் சிகிச்சைக்கான ரேடியோ தெரபி தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து தமிழ்நாடு அரசின் சுகாதார சிறப்பு திட்டத்தின் கீழ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் தனியாக தொடங்கப்பட உள்ளது. இங்கு நரம்பியல், மூளை நரம்பியல், இருதய வியல், பொது மருத்துவம், கேன்சர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கான பிரிவுகள் செயல்படும். தனித்தனியாக டாக்டர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பிளாக் தனியாக தொடங்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 21 கோடி ரூபாய் மதிப்பில் அதிதீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளதாகவும் டாக்டர்கள் கூறினார்கள்.