கொமதேக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்

நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் குறைந்தபட்சம் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-16 14:50 GMT

விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய போது 

நாமக்கல் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதையொட்டி அக்கட்சியின் சார்பில் நாமக்கல் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. ரூ. 10 ஆயிரம் டெபாசிட் தொகையுடன் மொத்த பதினைந்து பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

இதையொட்டி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட கொமதேக அலுவலகத்தில் விருப்ப மனு செய்தவர்களுக்கான நேர் காணல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தற்போதைய நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மற்றும் குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள்.

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள், கொமதேக இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி உள்ளிட்ட விருப்ப மனு தாக்கல் செய்த 15 பேரிடம், குழுவினர் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். இதைத்தொடர்ந்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திமுக கூட்டணியில், நாமக்கல் லோக்சபா தொகுதி மீண்டும் கொமதேகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக அரசு பெண்களுக்கு இலவச பஸ்வசதி, மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி, 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கும் திட்டம், இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இதனால் கோடிக்கணக்கான தமிழக பொதுமக்கள் தமிழக அரசின் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். மேலும் கொமதேக சார்பில் நாமக்கல் மாவட்டம் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும் சாலை வசதி, பாலம் வசதி போன்றவற்றை செய்து தந்துள்ளோம், அதற்கான பட்டியலை வைத்துள்ளோம். குறிப்பாக நாமக்கல் கொமதேக எம்.பி. சின்ராஜ் லஞ்சம் வாங்காமல் செயல்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.

எனவே மீண்டும் கொமதேகவிற்கு ஓட்டளிக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். கடந்த தேர்தலில் 2.60 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். அப்போது திமுக ஆளுங்கட்சியாக இல்லை. இந்த தேர்தலில் சாதனைகளை கூறி வாக்கு கேட்போம், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் குறைந்தபட்சம் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். பிரதமர் மோடி லஞ்ச ஊழல் அற்ற நிர்வாகம் நடத்தி வருகிறார் என பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக செய்துள்ள மிகப்பெரும் மோசடியை சுப்ரீம் கோர்ட் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஆளுங் கட்சியின் அச்சுறுத்தலின் பேரில் யாரெல்லாம் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு பணம் கொடுத்துள்ளனர் என்பதை வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் வெளியான இந்த மிகப்பெரிய ஊழலால், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர். எனவே இந்த லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்ப்பாளர்கள் நாடு முழுவதும் பெருமளவில் வெற்றிபெறுவார்கள் என அவர் கூறினார்.

Tags:    

Similar News