செப்டிக் டேங்கில் பணியாளர்கள் இறங்கினால் சிறை: ஆணையர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் ஊழியர்கள் செப்டிக் டேங்கில் இறங்க கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்தார். 

Update: 2024-02-09 01:40 GMT

உபகரணங்கள் வழங்கல் 

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய துப்புரவு பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக   மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நேர்டு தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு வார திறன் மேப்பாட்டு பயிற்சியின் நிறைவு விழா மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது.  நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார்   பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

அப்போது, அவர் "மாநகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் ஊழியர்கள் செப்டிக் டேங்கில் இறங்க கூடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்தில் உயிர் போய்விடும். இந்த பயிற்சியில், எக்காரணத்தைக் கொண்டும் செப்டிக் டேங்க் என்று சொல்லப்படுகின்ற கழிவு நீர் தொட்டியில் இறங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தது இந்த பயிற்சியின் சிறப்பு அம்சமாகும் என்றார். 

மேலும், செப்டிக் டேங்கை 2 முதல் 3 வருடங்களுக்கொரு முறை சுத்திகரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சுத்திகரிக்கும் பொழுது பணியாளர்களை தொட்டியில் இறங்க அனுமதித்தால் வீட்டு உரிமையாளருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2 இலட்ச ரூபாய் அபராதமும் விதிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தூய்மை பணியாளர் குடும்பத்தினர் கழிவை இயந்திரங்கள் மூலமாக கையாளும் தொழில் துவங்க முன் வந்தால் மானியத்துடன்  கூடிய கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.செப்டிக் டேங்க் கழிவுநீர் வாகனங்கள் வாங்குவதற்கும் சுமார் பத்து லட்சம் வாங்குற செலவில் 5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாநகராட்சி மேயர் பி.ஜெகன்  தூய்மை பணியாளர்கள் கழிவை கையாள ஆரம்பிக்கும் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்தை வெகு விரைவில் வாங்கி தருவதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பயிற்சியை பயன்படுத்த தூய்மை பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வருமாறும் கேட்டுக்கொண்டார். பணியாளர்களுக்கு சேலை, இனிப்புகள், உபகரணங்களையும் வழங்கினார். எல்லோருடைய முயற்சிகளின் மூலமாக தூத்துக்குடி மாநகராட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வந்துவிட முடியும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிப் பேசிய பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி மைய இயக்குனரும் நேர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனருமான பேராசிரியர் சௌ.காமராஜ்  கழிவிலிருந்து  மீத்தேன் உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த முன்வரும் தூய்மை பணியாளர்களுக்கு நேர்டு தொண்டு நிறுவனமானது, திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுப்பதோடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில் நுட்ப வசதியையும் தூய்மை பணியாளர் குழுக்களுக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  பயிற்சியில் பேசிய நேர்டு   தொண்டு நிறுவன தலைவி  சத்யஜோதி  தமது நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழுக்கள் ஆரம்பித்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கோடி ரூபாய்க்கு கடன் உதவி வழங்கியுள்ளதாகும்,அதனை திருப்பி செலுத்தும் விகிதம் 98 சதவீதத்தின் மேல் இருப்பதாகவும் தெரிவித்தார் அவர்களுக்கு வேண்டிய தொழில் பயிற்சி கொடுத்து இந்த மாதிரியான திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார்.  தூத்துக்குடி மாநகராட்சியின் துணை மேயர் ஜெனிட்டா,  நேர்டு  தொண்டு நிறுவனம் கடந்த 40 ஆண்டு காலமாக மாநகராட்சியில் சிறந்ததொரு பணி செய்து வருவதாகவும், நாங்களும் எல்லாவித உதவியும் அவர்களோடு இணைந்து மகளிர் குழுக்களுக்காக செய்ய தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.  நிகழ்ச்சியின் இறுதியாக தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி  நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News