மணக்கவில்லை மல்லிகை விலை !
ஆலங்குடி பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட வம்பன், மாஞ்சான் விடுதி, கொத்தகோட்டை, வேப்பங்குடி, அரசம்பட்டி, கும்மன்குளம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, சேந்தன் குடி, பணகுளம், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த மாங்கோட்டை காத்தான் விடுதி, வலக்குளம், களம்பம், துவரம் கொல்லம்பட்டி, ஆகிய பகுதிகளிலும் அதிக அளவில் மல்லிகை ,முல்லை செண்டிப்பூ, கனகாம்பரம், காக்கரட்டான், செவ்வந்தி, ரோஜா, சம்பங்கி, பிச்சிப்பூ, கோலிகொண்டை உட்பட மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் மலர்கள் கீரமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மலர் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன பொதுவாக கோயில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் மட்டுமே மலர்கள் விலை அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் விலை குறைவாகவே இருப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு வரை திருவிழாக்கள், முகூர்த்த நாட்கள் காரணமாக ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 1200, முல்லை ரூபாய்1000, கனகாம்பரம் ரூபாய் 800, சம்பங்கி ரூபாய் 150, அரளி ரூபாய் 150, விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று மல்லிகை ரூபாய் 300, முல்லை ரூபாய் 200, கனகாம்பரம் ரூபாய் 250, சம்பங்கி ரூபாய் 50, காக்கரட்டான் ரூபாய் 100, ரோஜா ரூபாய் 30-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர். சாகுபடிக்கு செலவு செய்த தொகையை கூட எடுக்க முடிய முடியவில்லை நஷ்டத்துக்கு உள்ளாகி இருப்பதாக கவலை தெரிவித்தனர்.