ஜெயங்கொண்டம் : இலையூர் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-13 01:45 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் பிரசத்தி பெற்ற ஸ்ரீ விநாயகர், செல்லியம்மன், அய்யனார் கோவில்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இதனிடையே ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவை நடத்த முன்வந்து, பல லட்சம் செலவில் கோவில் திருப்பணிகளை முடித்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதலாம் யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், செல்லியம்மன், அய்யனார் ஆகிய கோவில் ராஜ கோபுர கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு திராளாக கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர்  மகாதீபாரதனை காட்டப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இலையூர்  ஊராட்சித் தலைவர் அறிவழகன், பாமக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன், ஜெயங்கொண்டம் அதிமுக நகர கழக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கிராம நாட்டாமைகள், கோவில் தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News