ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை கொள்ளை

கோவில்பட்டி அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-05-26 07:29 GMT

பைல் படம் 

. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் மணி. இவர் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா. இவர் கழுகுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கோவையில் படித்து வருகிறார். தற்போது கோடைவிடுமுறை என்பதால் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன், கோவையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலையில் மணி வீட்டில் பணிபுரிக்கூடிய பணிப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் மணிக்கும், நாலட்டின்புதூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மணி தம்பதியர் வந்த பிறகு தான் எவ்வளவு நகைகள் திருட்டு போய் உள்ளது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News