ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் வீட்டில் நகை திருட்டு
நாகர்கோவிலில் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் வீட்டில் நகை திருட்டில் ஈடுப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் சில்வான். இவர் தனது குடும்பத்துடன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மீகாள் இன்ப டானி(53) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.
மகன் சச்சின் நாகர்கோவில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மகள் சென்னையில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். சம்பவத்தினம் இவர்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இரவு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகை பெட்டியை காணவில்லை. அதில் மூன்றரை பவுன் தங்க நகைகள் இருந்தன. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. யார் எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இது குறித்து மீகாள் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் நடந்துள்ள நகை திருட்டு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.