பழனி கோயில் குறித்த தீர்ப்பு கண்டிக்கத்தக்கது
மாற்று மதத்தினர் பழனி மலைக் கோயிலுக்கு வரக்கூடாது என, உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு வன்மையான கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
Update: 2024-02-02 01:34 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் விழா அரங்கில், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர், முனைவர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரெட்டவயல் கே.வி.முத்தையா, பட்டுக்கோட்டை ஈஸ்டர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, மக்களை பிளவுபடுத்தும் மதவாதத்தை எதிர்த்து முறியடிக்க திருக்குறளை அறிவாயுதமாக பயன்படுத்த தீர்மானித்து, உலக பொதுமறையாம் திருக்குறளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில், 1,330 பேர் பங்கேற்கும் திருக்குறள் பேரணியை தமிழ்நாடு முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலில் மாற்று மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்துக்குரியது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் ஊராட்சியில், பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.