ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் களபபூஜை
கன்னியாகுமரி மாவட்டம்,திருவட்டாறு, ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 15.ம் தேதி முதல் வரும் 26.ம் தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெற உள்ளது.;
குமரி மாவட்டம், திருவட்டாறு, ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிசேஷகம் நடைபெறும். 15.ந்தேதி காலை நிர்மால்யதரிசனத்துக்குப்பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அபிஷேகம், தீபாராதனையைத்தொடர்ந்து சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து 9 மணி அளவில் கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடக்கிறது. பின்னர் உதய மார்த்தாண்டமண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்துவார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிது.
சுமார் 11.45 மணி அளவில் ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகளுக்கு களப அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்குப்பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். தீபாராதனைக்குப்பின்னர் சுவாமி விக்கிரகங்கள் மீண்டும் கருவறைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இவ்வாறு 15.ம் தேதி முதல் வரும் 26.ம் தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 27.ம் தேதி காலை 10 மணி அளவில் 47 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறும் .