நாதஸ்வர கலைஞருக்கு கலைமுதுமணி விருது
பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் முருகேசனுக்கு தென்காசியில் நடைபெற்ற விழாவில் கலை முதுமணி விருதை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் முருகேசன். இவர் 1980ம் ஆண்டு முதல் தற்போது வரை நாதஸ்வர கலைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தந்தை துரை சாமி (தவுல்), தாயர் முத்து லட்சுமி (நாதஸ்வரம்) இக் கலையில் ஈடுபட்டிருந்த னர். அவர்கள் வழியில் நாதஸ்வர தொழிலில் ஈடுபட்டு வரும் முருகேசன் கடந்த 1983ம் ஆண்டு முதல் 1994 ம் ஆண்டு வரை அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 2005ம் ஆண்டு அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நடைபெற்ற நிகழ்ச்சி யிலும், 2012ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிராமிய கலை விருதில் சிறந்த வாழ்நாள் சாதனைகள் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தென்காசியில் நடைபெற்ற கலை பண்பாட்டுத்துறை நிகழ்ச்சியில் முருகேசனை பாராட்டி தமிழக அரசு சார்பில் கலைமுதுமணி விருதினை, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார்.