காஞ்சி வரதர் கோவில் தங்க மோசடி புகார்- இணை கமிஷனர் நேரில் விசாரணை
சன்னிதி விமானத்திற்கு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் அறநிலையத் துறை இணை கமிஷனர் சுதர்சனம் நேற்று ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயார் சன்னிதியை புதுப்பிக்க, 2010ல் அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது, சன்னிதி விமானத்திற்கு, ஐந்து உபயதாரர்கள் வாயிலாக, 60 கிலோ தங்கத்தில், 12.53 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு அடுக்குகளில், -'தங்க ரேக்' அமைக்கும் பணி மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், உபயதாரர்கள் வாயிலாக, 1 கிலோ தங்கம் மட்டுமே, கோவிலுக்கு வழங்கப்பட்டது. எனவே, அந்த பணி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 'எலக்ட்ரோ பிளேட்டிங்' முறையில், தங்க முலாம் பூசும் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. உபயதாரர் ஒருவரால், தாயார் சன்னிதி விமானத்திலும், தங்க முலாம் பூசி தகடுகள் மீண்டும் பொருத்தப்பட்டன.
இப்பணிக்கு செலவிடப்பட்ட 'தங்கம், செம்பு விபரத்தை பதிவேட்டில் பதிவு செய்து, அதன் நகலை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்; தங்க முலாம் பூசும் பணிகளை புகைப்படம் எடுக்க வேண்டும்' என கமிஷனரின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்திருப்பதாக, அறநிலையத் துறை கமிஷனருக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் தொடர்பாக, அறநிலையத் துறையின் திருவண்ணாமலை இணை கமிஷனர் சுதர்சனம், வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆய்வு செய்தார். தங்க மோசடி புகார் கொடுத்த, டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோரிடமும், இணை கமிஷனர் சுதர்சனம், புகார் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பினார்.