அரை குறையாக துார்வாரப்பட்ட காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய்
திருக்காலிமேடு அருந்ததியர் நகர் பகுதியில் மஞ்சள் நீர் கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரில் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள் நீர் கால்வாய் புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. ஆண்டுதோறும் பருவமழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஞ்சள் நீர் கால்வாய் துார்வாரப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை ஒட்டி, கடந்த மாதம் மஞ்சள் நீர் கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது. இதில், திருக்காலிமேடு அருந்ததியர் நகரை ஒட்டியுள்ள பகுதியில் செடி, கொடிகள் மண்டியுள்ள பகுதியில் அரைகுறையாக துார் வாரப்பட்டு உள்ளது. துார்வாரிய கழிவுகளும் அகற்றப்படாமல் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. இதனால், பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தால், துார்வாரிய கழிவுகள் மீண்டும் கால்வாயில் சரிந்து விழும் சூழல் உள்ளது. மேலும், கால்வாயில் செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் சூழல் உள்ளது. எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் பகுதியில் மண்டி கிடக்கும் புதர்களை முழுமையாக துார்வாரி அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
திருக்காலிமேடு அருந்ததியர் நகர் பகுதியில் மஞ்சள் நீர் கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.