கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கு: 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கு ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைகக்பட்டது.
கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கில், இயங்காத சி.சி.டி.வி.,யை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து முழு விபரத்தை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு, கடந்தாண்டு மே 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜராகினார். அப்போது நீதிபதி ஸ்ரீராம், சரியாக இயங்காத சி.சி.டி.வி., காட்சிகளை தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆராய்ந்து சான்றுடன் கூடிய முழு விபரம், முதல் தகவல் அறிக்கை, போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் ஜி.டி., விபரம் ஆகியவற்றை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.