ஸ்ரீ பிரத்தியேங்கரா கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ஸ்ரீ பிரத்தியேங்கரா கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாடு, செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் விலக மிளகாய் வத்தல் யாகம்
Update: 2023-11-28 04:57 GMT
ஒசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியேங்கரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினமான நேற்று இரவு ஸ்ரீ பிரத்தியேங்கரா கோயிலில் நடைபெற்ற யாகத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகளை விரட்டவும் மிளகாய்களை யாகத்தில் போட்டு சிறப்பு யாகம் நடத்தினர். இந்த மிளகாய் வத்தல் யாகத்தில் மிளகாய்களின் நெடி வாசனை வராது என்பது சிறப்பாக உள்ளது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதேபோல ஸ்ரீராகு ஸ்ரீகேது, ஸ்ரீமகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீபிரத்தியேங்கரா தேவி அம்மனுக்கு மங்கள ஆரத்தி காட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.